புதுடில்லி: பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக, இளைஞனை காதலித்து, வீட்டை விட்டுச் சென்று, காதலனை மணந்து கொண்ட, 16 வயது சிறுமியை, கணவனிடம் ஒப்படைக்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
=============================================
டில்லியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கும், காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இருவரும், வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து
கொண்டனர். சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.
தனியாக குடித்தனம் நடத்திய அந்த ஜோடியை பிடித்திழுத்து வந்த போலீசார், வழக்கு தொடர்ந்தனர். விஜேந்தர் சிங் என்ற, அந்தச் சிறுமியின் கணவனுக்கு, சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தச் சிறுமியை, அவள் பெற்றோருடன் செல்ல, விசாரணை கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், பெற்றோருடன் செல்ல, அந்தச் சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுமியர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இப்போது, அந்தச் சிறுமிக்கு, 16 வயது ஆகிறது.
தன் காதல் மனைவியை, சிறுமியர் காப்பகத்தில் அடைத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னுடன் வாழ அனுப்பி வைக்குமாறு கோரியும், விஜேந்தர் சிங், டில்லி, மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இனா மல்கோத்ரா உத்தரவிட்டதாவது:
அந்தச் சிறுமிக்கு இப்போது, 16 வயதுக்கும் மேலாகிறது. இருவரும் திருமணம் செய்து, சேர்ந்து வாழ்ந்துள்ளனர். வயதில் அந்தப் பெண், சிறுமியாக இருந்த போதிலும், பருவம் எய்தியுள்ளார். எனவே, அந்த ஜோடியை பிரித்து வைப்பது சரியல்ல; அந்தச் சிறுமியை உடனடியாக, சிறுமியர் காப்பகத்திலிருந்து விடுவித்து, காதல் கணவனுடன் அனுப்பி வைக்க வேண்டும். சட்டப்படி, 18 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு, நடைபெறும் திருமணம், குழந்தை திருமணமாகக் கருதப்படுவது, வேறு வழக்கு. அது பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இருவரும் விரும்பி, திருமணம் செய்து கொண்டுள்ள பிறகு, முக்கிய முடிவுகள் எடுக்க, அவர்கள் தயாராக இருக்கும் போது, அந்தப் பெண்ணை, சிறுமி என கருதி, அந்த ஜோடியை பிரித்து வைக்கக் கூடாது. அந்தச் சிறுமியை, அவளின் கணவனுடன் அனுப்பி வைப்பதில், சட்ட மீறல் எதுவும் இல்லை. குழந்தை திருமண சட்டம், இந்த வழக்கிற்கு பொருந்தாது.
இவ்வாறு, நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
4-10-13
No comments:
Post a Comment