பஞ்சமி நிலங்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
1891 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. ஹெச். ஏ. ட்ரெமென் என்ற ஆங்கிலேய அதிகாரி பிரிட்டிஷ் அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பரிதாப நிலையை சுட்டிக்காட்டிய அவர், நிலங்களை அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கவும் சிபாரிசு செய்தார் . அவரது அறிக்கை கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
அந்த அறிக்கையின்படி தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலைமையை முன்னேற்ற விவசாயம் செய்ய அவர்களுக்கு நிலங்களை கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி 30.9.1892 ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி தாழ்த்தப்பட்ட மக்களிடம் விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிலங்களுக்கான விதிகளை வருவாய் ஆணையம் வெளியிட்டது. அவ்விதிகளில் சில
1. 10 ஆண்டுகளுக்குள் நிலத்தை யாரிடமும் விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது.
2. 10 ஆண்டுகளுக்கு பின் நிலத்தை வேறோரு தாழ்த்தப்பட்ட நபரிடம் தான் விற்கவோ அடமானம் செய்யவோ வேண்டும்.
3. இவ்விதிமுறைகளை கூறினால் நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.
நில ஒப்படை விதிகளை மீறி நிலமாற்றம் செய்தால் அது சட்டப்படி செல்லாது. அப்படி விதி மீறப்பட்டால் வருவாய் வாரியமே அந்நிலங்களை திருப்பி எடுத்துக் கொள்வதற்கு அவ்விதிகளில் இடமிருந்தது. இதையும் மீறி அந்நிலங்களை ஆதிக்க சக்திகளும், கட்டுமான நிறுவனங்களும் அவர்களிடமிருந்து பலவந்தமாகவோ அல்லது பணம் கொடுத்தோ பறித்துக் கொண்டனர். பஞ்சமி நிலங்கள் பறிக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் இயக்கங்கள் தொடங்கப்பட்ட பிறகு விழித்துக் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அவரவர்கள் பகுதிகளிலிருந்த பஞ்சமி நிலப் பரிமாற்றங்களை ரத்து செய்து நிலங்களை மீட்க முயன்றனர். அம்முயற்சிகளை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதியரசர் பஞ்சமி நிலங்கள் பற்றிய வரலாற்றை குறிப்பிட்டதுடன் நிலப் பரிமாற்றம் ஒப்படைப்பு விதிகளுக்கு புறம்பாக இருந்ததனால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவற்றை ரத்து செய்ய முழு உரிமை உண்டு என்று தீர்ப்பு கூறினார்.
பார்க்க :
வி. ஜி. பி பிரேம் நகர் மின்வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பலர் Vs தமிழ்நாடு அரசு அதன் வருவாய்த்துறை அரசு செயலாளர் மூலம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை மற்றும் பலர், W. P. NO - 17467/1996, உடன் மற்ற தொகுப்பு வழக்குகள், 7.11.2008
மேற்படி தீர்ப்பினை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீடும் இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சால் தள்ளுபடி செய்யப்பட்டது.
(2010-6-MLJ-337-DB)
பஞ்சமர் நில பயனாளிக்கு வழங்கபட்ட ஒப்படைப்பு சான்றிதழ் நகல் எவ்வாறு எந்த துறையின் மூலம் பெறவேண்டும்?
ReplyDelete