Tuesday, 27 March 2018

Art

அதாவது 'சுமதி - எதிர்- செங்கோட்டையன் மற்றும் பலர்' என்ற வழக்கில் செங்கோட்டையன் வகையறா பஞ்சாப் நேஷனல் பேங்க் என்ற வங்கியில் கடன் பெற்று இருந்தனர். அதை கட்ட முடியவில்லை. எனவே அவ்வங்கி சர்பாசி சட்டத்தின் கீழ் அவர்களது பிணைய சொத்தை பற்றுகை செய்து கடனை வசூலிக்க நடவடிக்கை எடுத்தது. இதற்காக கோவையில் உள்ள வங்கி கடன் வசூல் தீர்ப்பாயத்தில் மேற்படி செங்கோட்டையன் வகையறாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தது. பிணைய சொத்தை ஏலத்தில் விற்கவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதை தவிர்க்க அவர்கள் மேல் முறையீடு, நீதிப்பேராணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்தனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதற்கிடை யில் வங்கி தனது ஏல நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள ஆரம்பித்தது. இதை நிறுத்த எதாவது செய்ய முடியுமா என்று மேற்படி செங்கோட்டையன் வகையறா மிகவும் தீவிரமாக சிந்தித்தது. முடிவில் செங்கோட்டையன் தனது மகள் சுமதியை விட்டு சம்பந்தப்பட்ட பிணைய சொத்திலிருந்து பாகப் பிரிவினை கோரி தங்கள் மீதும் மேற்படி வங்கியின் மீதும் வழக்கிட வைத்தனர். குறிப்பாக அப்பாகப்பிரிவினை வழக்கு முடிவாக முடியும் வரை வங்கியானது பிணைய சொத்தை ஏலத்திற்கு கொண்டு வரக் கூடாது என்று இடைக்கால உறுத்துக்கட்டளை (இண்டரிம் இஞ்சன்சன்) கோரி தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இம்மனு கீழமை மற்றும் முதல் மேல்முறை யீட்டு நீதிமன்றத்தில் தோற்றுப் போனது. எனவே இதை எதிர்த்து சுமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் சீராய்வு மனு (சிவில் ரிவிசன் பெட்டிசன்) தாக்கல் செய்தார்.
இதை ஆராய்ந்த மாண்பமை நீதியரசர் எம். ஜெயபால் சர்பாசி சட்டம், 2002-இன் 34-ஆம் பிரிவின் வாயிலாக கூறியுள்ள தடையை தனது தீர்ப்புரையில் சுட்டிக்காட்டினர். அதாவது மேற்படி பிரிவு 34-இன்படி சர்பாசி சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவை செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி இடைக்கால உறுத்துக்கட்டளை உள்ளிட்ட இடைக்கால நிவாரணம் ஏதும் வழங்குவதிலிருந்து உரிமையியல் நீதிமன்றம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பஞ்சாப் நேசனல் வங்கி பிணைய சொத்தை ஏலத்திற்கு கொண்டு வருவதிலிருந்து அதை தடுத்து நிறுத்த சுமதி கோரியபடி இடைக்கால உறுத்துக்கட்டளை வழங்க முடியாது என்று மாண்பமை நீதியரசர் எம். ஜெயபால் தெளிவுபடுத்தினர். முடிவில் சுமதியின் உரிமையியல் சீராய்வு மனுவை (சிவில் ரிவிசன் பெட்டிசன்) தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.

இத்தீர்ப்பில் மற்றொரு சட்ட நிலைபாட்டையும் அவர் தெளிவுபடுத்தினர். அதாவது சுமதிக்கு உள்ளபடியே வங்கியின் சட்ட நடவடிக்கைளில் குறை ஏதும் இருந்தால் அல்லது அது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அது பற்றி அவர் சர்பாசி சட்டம் பிரிவு 17-இன்படி கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிடலாம். ஆனால் சுமதி அவ்வாறு செய்யவில்லை. எனவே சுமதியின் மனுவில் நற்கூறுகள் இல்லை.

No comments:

Post a Comment