Tuesday, 27 March 2018

குற்ற வழக்கில் தொடர்புள்ளவரின் ஓட்டுநர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்கில் தொடர்புள்ளவரின் ஓட்டுநர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
**************************************************************************
குற்றவழக்கில் தொடர்புடையவர்களின் ஓட்டுநர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
  சேலத்தைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பி.குமாரராஜா. இவர் 2014 ஆகஸ்டில் பேருந்து ஓட்டிச் செல்லும் போது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தொட்டியம் போலீஸார் வழக்குப்பதிந்து குமாரராஜாவின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்து ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்தனர். 
ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்வதில் போலீஸார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் விதிகளைப் பின்பற்றவில்லை. ஓட்டுநர் உரிமம் இல்லாததால் 2 ஆண்டுகளாக என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஓட்டுநர் உரிமத்தை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் குமாரராஜா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவு: விபத்து நடந்த உடனே ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் பறிமுதல் செய்ய முடியாது. விபத்தில் தொடர்புடையவர் தலைமறைவாகி விடுவார் என்று கருதினால் மட்டுமே ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்யலாம். அதேபோல், வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய முடியாது. ஓட்டுநர் உரிமம் பெற்றவர் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தால், மோட்டார் வாகனச் சட்டப்படி விளக்க நோட்டீஸ் அனுப்பி அதன் பின்னர் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யலாம். 
இந்த வழக்கில் வட்டார போக்குவரத்து அலுவலர் மோட்டார் வாகனச் சட்டப்படி மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்து வைத்துள்ளார். 2 ஆண்டுகளாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மனுதாரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரரின் ஓட்டுநர் உரிமத்தை அவரிடம் வழங்க வேண்டும். அதே நேரத்தில் மோட்டார் வாகனச் சட்டப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் ஏதாவது உத்தரவு பிறப்பித்தாலோ, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் உத்தரவிட்டாலோ மனுதாரர் தனது ஓட்டுநர் உரிமத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Source: dinamani  18th October 2016
------------------------------------------------------------
நீதிமன்றத்தின் -- முக்கிய உத்தரவுகள் சார்பான எனது அனைத்துபதிவுகளின் தொகுப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1220282394782309
___________________________________________
என் முகநூல் பதிவுகளை அதன் தலைப்புகள் வாரியாக வகைப்படுத்தப்பட்டதன் மொத்த தொகுப்பு
https://www.facebook.com/trduraikamaraj/posts/1220044361472779

No comments:

Post a Comment