Tuesday, 27 March 2018

மரண வாக்கு மூலம் அல்லதுஉயில் - சட்டம்

😟மரண வாக்கு மூலம் அல்லது😄 உயில் - சட்டம்





நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குடிமக்கள் நலனுக்காக பல சட்டங்கள் மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. தான் வாழும் காலத்தில் குழந்தை பருவம் மூலம் முதியோர் ஆகும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு உரிமைகள் உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், சிறுவர் பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம், சிறுவர் சீர்த்திருத்த சட்டம், மாணவர்கள் நலனுக்கான சட்டங்கள், இளைஞர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள், பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம், தொழிலாளர், அமைப்புச்சாரா தொழிலாளர், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் மற்றும் தொழிலாளரின் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள், வாழ்வுரிமை உறுதிப்படுத்தும் சட்டம் என பல சட்டங்கள் உள்ளது. 

அந்த வரிசையில் ஒருவர் தனக்கு சொந்தமான சொத்தை தான் வாழ்நாள் முடிந்த பின் யார் அனுபவிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை வசதிப்படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கொஞ்சமோ, அதிகமோ அசையும் மற்றும் அசையா சொத்துகள் யாருக்கு உரிமையானது எனபதை தீர்மானிக்கும் உரிமை தனி மனிதருக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. அதன்படி ஒருநபர் தனது மரணத்திற்கு பின் தனக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பாக இருக்கும் தனது விருப்பத்தை தெரிவித்து சட்டப் படியான அங்கிகாரம் வழங்குவதற்கு உயில் அல்லது மரண வாக்கு மூலம் என்று ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய உரிமையாளர் சட்டம் 1925ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயில் என்றால் என்ன?

1. ஒரு நபர் சட்டத்தின் மூலம் செய்யும் பிரகடனம்.

2. இந்த அறிவிப்பு தனது மரணத்திற்கு பின் அவரது சொத்து யாருக்கு சொந்தம் என்பதை உறுதிபடுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

3. இந்த அறிவிப்பு சட்டத்திற்கு உட்பட்டு. மேலும் உயில் எழுதும் நபர் தான் வாழும் காலத்தில் அவரது செயலில் உள்ள சொத்து மூலம் பலனடைந்து வர வேண்டும். அவர் பெயரில் உள்ள சொத்து மட்டுமே அவர், தனது மரணத்திற்கு பின் யார் பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்ய முடியும். மேலும் சொத்து உரிமையாளர் உயில் எழுதும் வகையில் திறமைபடைத்தவராக இருக்க வேண்டும்.

4. உயில் என்பது வாய்மொழி வார்த்தையாக இருக்ககூாடது. எழுத்து மூலமாக பதிவு செய்ய வேண்டும். உயில் எழுதும் நபர் ராணுவத்தில் பணியாற்றி யுத்தத்தில் ஈடுபடும் பட்சத்தில் எழுதப்படும் உயிலுக்கு சிறப்பு உயில் (Priviledged will) என்று அங்கிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு உயிலை தவிர பிற அனைத்து உயில்களும் (UnPriviledged will) வடிவில் இருக்க வேண்டும்.

சிறப்பு இல்லாத உயிலை யார் எழுத முடியும்?

18 வயது முடிந்து முழுமையாக சுயமனநிலையோடு இருக்கும் யாரும் (UnPriviledged will) உயில் எழுதும் தகுதி பெற்றுள்ளனர்.

1. திருமணமான பெண் ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை தான் வாழும் காலத்தில் அதை மற்றவர்களுக்கு வழங்கும் உரிமை பெற்றுள்ளார். அவர் தனது சொத்தை யாருக்கு வழங்குகிறார் என்று உயில் எழுதும் உரிமை பெற்றுள்ளார்.

2. ஒருவர் சில சமயத்தில் மனநிலை பாதிக்கப்பட்டராகவும், சில சமயத்தில் நல்ல மனநிலையில் இருப்பவராக இருக்கும் பட்சத்தில் அவர் நல்ல மனநிலையில் இருக்கும் போது தனது சொத்து தொடர்பாக உயில் எழுத முடியும்.

* எந்த தனிநபரும் உடல் நிலை பாதிக்கப்பட்டோ, தான் செய்வது என்னவென்று தெரியாமல் இருந்தாலோ அல்லது தன்னுடன் பேசுபவர் யார் என்பதை அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பவர் உயில் எழுத முடியாது. அப்படி எழுதியதாக சொல்லப்படும் உயில் செல்லுபடியாகாது.

* தனிநபர் ஒருவர் பிற நபர்களால் மிரட்டியோ, மூளைசலவை செய்தோ, வஞ்சனை மூலமோ ஆட்பட்டு உயில் எழுதியிருந்தால் அது செல்லாது.

* தனிநபர் ஒருவர் மீது இருக்கும் சொத்தை அந்த நபர் யாருக்கும் எழுதி கொடுக்க முடியாத மனநிலையில் இருக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக பெற்றோர், கணவன் / மனைவி அல்லது உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் யாரும் அவர் சார்பில் உயில் எழுத முடியாது.

பராமரிப்பு:

உயில் எழுதி கொடுக்கும் நபர், அதை நம்பிக்கைகுரிய ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். அது ஒருவராகவோ அல்லது பலராககூட இருக்கலாம் மேலும் உயிலை கண்டிப்பாக அரசு துறையில் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் பதிவு செய்வது நல்லது. காரணம் சொத்தின் மூலபத்திரம் சந்தர்ப்ப சூழ்நிலையால் காணாமல் போகும் பட்சத்தில் உயிலில் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் உண்மை என்பதை உறுதி செய்து கொள்ள பதிவு உதவும். எப்படி என்றால், தனிநபர் தனது மரணத்திற்கு பின் தனது சொத்து யாருக்கு சொந்தம் என்று உயிலில் குறிப்பிடுகிறாரோ அந்த சொத்து தொடர்பாக மூல பத்திரத்தில் உள்ள அனைத்து விவரங்களும் உயிலில் இடம் பெறுகிறது. மேலும் உயில் எழுதும் நபர் அதை தன்னுடன் வைத்து கொள்ளலாம் அல்லது தனக்கு நம்பிக்கைக்குரியவரிடம் ஒப்படைக்கலாம் அல்லது மூடப்பட்ட கவரில் வைத்து அரசு பதிவு துறை அதிகாரியின் லாக்கரிலும் ஒப்படைத்து, அதற்கான நகல் ரசீது பெற்று கொள்ளலாம். உயில் எழுதிய நபர் மரணமடைந்தால், அவரது ரத்த சம்மந்தமான உறவினர்கள் பதிவு துறை அதிகாரியிடம் மனு கொடுத்து உயிலை பெற்று கொள்ளலாம்.
மேலும் பாதுகாப்புடன் உள்ள உயிலை எழுதி கொடுத்த நபர், தான் வாழும் காலத்தில் வாபஸ் பெற்று கொள்ள தீர்மானித்தால் அதற்கான உரிமை அவருக்குள்ளது. 

உயிலை ரத்து செய்வது எப்படி?

உயில் எழுதும் நபர் தான் வாழும் காலத்தில் அதில் திருத்தம் செய்ய விரும்பினால், அதற்கான உரிமை உள்ளது. தான் ஏற்கனவே எழுதிய உயிலை ரத்து செய்துவிட்டு, புதியதாக உயில் எழுதலாம். அதற்கு சட்டத்தில் கொடிசியல் என்று அழைக்கப்படுகிறது. மூல உயிலில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளதோ, அதை திருத்திய உயிலில் குறிப்பிடவேண்டும். மூல உயில் பதிவு செய்யப்பட்ட உயிலாக இருந்தால் அதை அழிப்பது அல்லது அதற்கு பதிலாக திருத்தி எழுதப்பட்ட உயிலை சேர்த்தால், மூல உயில் செல்லாததாகிவிடும். மூல உயில் பதிவு செய்யப்பட்டிருந்தால், மாற்றியமைக்கப்பட்ட உயிலை கொடுத்து, முதலில் பதிவு செய்த உயிலை முறைப்படி ரத்து செய்ய கோரி மனு கொடுக்க வேண்டும். மூல உயிலை ரத்து செய்ய தீர்மானித்தால், அதற்கு தனியாக கடிதம் கொடுத்து ரத்து செய்யலாம். அதே சமயத்தில் ஒரு உயில் ரத்து செய்யப்பட்டால், அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. ஆனால் அதில் உள்ள சில அம்சங்களை எடுத்து புதிய உயிலாக தயாரிக்க முடியும்

No comments:

Post a Comment