*பெண் வழக்கறிஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள்?*
சில வருடங்களாக முன் எப்போதைக் காட்டிலும் சட்டக்கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், இதரத் துறைகளைப் போலவே சட்டம் மற்றும் நீதித்துறையில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிளுக்கு இணையான தரத்தில் நமது சட்டக்கல்லூரிகள் இயங்குகிறதா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூற முடியும். அதற்கு அரசாங்கம் மட்டுமே காரணம் என்பதைக் காட்டிலும் மாணவர்களின் மனநிலையும் காரணமாகிறது.
சட்டக் கல்லூரியில் நுழையும் போதே, நம்மையாரும் கேள்வி கேட்கக் கூடாது, நாம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்ற மனப்பான்மை மாணவர்களுக்கு வந்துவிடுகிறது. இதைக் கட்டுப்படுத்த கல்லூரி நிர்வாகம் தவறிவிடுகிறது. இதனால் ஒரு தரமான சட்டக் கல்வியை பெற இயலாமல் போய்விடுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்டம் படிக்கும்; பெண்களின் வேலைவாய்ப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதில் பலரும் முதல் தலைமுறை நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்காக ஒரு வழக்கறிஞராக வரவேண்டும் என்று எண்ணினார்களோ, அந்த இலக்கை அவர்கள் அடைவதற்கு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் முன்னரே அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
சட்டக்கல்லூரிக்கு வரும்போது பெண்களின் கனவு என்னவாக இருக்கிறது?. ஒரு வழக்கறிஞராக பார்கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு வரும்போது அவர்களின் கனவு என்னவாக இருக்கிறது என்பதையெல்லாம் நாம் கவனித்தாக வேண்டும்.
இதரத் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களது அலுவலகத்திற்குச் சென்று வருவதைப் போல, பெண் வழக்கறிஞர்கள் இயல்பாக நீதிமன்றத்திற்கு வந்து செல்லமுடியாது. வழக்கறிஞராகப் பதிவு செய்தவுடன் முதலில் ஒரு அலுவலகத்தைத் தேர்ந்தெடுத்து பயிற்சி வழக்கறிஞராக நீதிமன்றத்திற்குள் நுழைவதற்கே பெரிய சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது.
பொதுவாக வழக்கறிஞர் அலுவலகங்கள் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும்தான் முழுமையாக இயங்கும். மற்ற நேரங்களில் நீதிமன்றங்களுக்குச் சென்றாகவேண்டும்.
பெண்களைப் பொறுத்தவரை மாலை நேரத்தில் வீட்டிற்குத் திரும்பியாக வேண்டும், விடுமுறை நாட்களில் வீட்டு வேலைகளைச் செய்தாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடம் இயல்பாக இருக்கிறது. நமது சமூகக் கட்டமைப்பும் அப்படித்தான் உள்ளது. இதில் இருந்து பெண்கள் அவ்வளவு எளிதில் விடுபட்டு வந்துவிட முடியாது.
பெண் வழக்கறிஞர்கள் முதலாவதாக எதிர்கொள்ளும் சிக்கல் அவர்களது திருமணம் குறித்த பெற்றோர்களின் கவலைதான். பெண்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், பெற்றோர்கள் முன்னால் உள்ள மிகப்பெரிய கடமை மகளின் திருமணம் பற்றியதாகத்தான் இருக்கிறது.
சட்டம் படித்த மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. பல பெற்றோர்கள் “தெரியாத்தனமாக லாகாலேஜில் சேர்த்துட்டேன், இப்ப மாப்பிளை பார்ப்பது சிக்கலாக இருக்கிறது” என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் மீது நமது பெற்றோர்கள் அதிகம் அன்பு செலுத்துவதுதான் இத்தகைய கவலைகளுக்குக் காரணமாகிறது.
அதிகம் பேசுவதையே விரும்பாத சமூகத்தில் ஒரு பெண் சட்டம் பேசினால் எந்த மாதிரியான எதிர்வினைகள் இருக்கும் என்பதும், அவர்கள் எதிர்நோக்கும் திருமண வாழ்வு எப்படி அமையும் என்பதும் பெற்றேர்களின் கவலைக்கு அடித்தளமாகிறது. வழக்கறிஞராக உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல, வழக்கறிஞராக உள்ள ஆண்களுக்கும் திருமண வாழ்வு என்பது எளிதில் அமைவதில்லை. ஒருசிலர் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.
காலம் வேகமாக மாறிவருகிறது அவரவர் கொள்கைகளுக்கும் மனநிலைக்கும் ஏற்றார் போல் தங்கள் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்ளும் நிலை வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பெற்றோர்கள் இன்னமும் அத்தகைய மனநிலைக்குத் தயாராகவில்லை. அது அவர்கள் பிள்ளைகளின் மீதான அக்கறையின் வெளிப்பாடாகவே தொடர்கிறது.
பணிநேரமும், ஊதியமில்லா வாழ்க்கையும் பெண் வழக்கறிஞர்களின் பெற்றோர்களை மேலும் மிகுந்த கவலைக்கு உள்ளாக்கிவிடுகிறது. உற்சாகமாகவும் தன்னம்பிக்கையோடும் நீதிமன்றத்திற்குவரும் பெண் வழக்கறிஞர்கள் சிறிது காலத்திலேயே மனச்சோர்விற்கு ஆளாகிவிடுகின்றனர். அதற்கு பெற்றோர்களின் கவலைகள் முதன்மையான காரணமாக இருந்தாலும், தனக்கென ஒரு வழக்கை எடுத்து நீதிமன்றங்களில் அவர்கள் வாதத்தை முன்வைப்பதற்குள் பல நடை முறைச் சிக்கல்களைக் கடந்தாக வேண்டியுள்ளது.
வழக்குத் தொடர்பாக அரசு அலுவலகங்களுக்கோ அல்லது காவல் நிலையங்களுக்கோ செல்லும் போது ஏளனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாக வேண்டியுள்ளது. இவைகளைக் கடந்து நீதிமன்றத்திற்கு வந்தால், பல நீதிமன்றங்களில் பெண்களுக்கு என்று தனியாக ஓய்வறைகள் மற்றும் கழிப்பறைகள் கிடையாது. இருக்கும் சில இடங்களிலும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை.
சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. புதிய கட்டடங்களில் பெண்களுக்கு என்று அறைகள் ஒதுக்கியிருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விசயமாக இருந்தாலும் அவைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. பல கட்டங்களில் தண்ணீர் வசதி என்பதே இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்கள் நீதிமன்றத்திற்கு வந்து செல்வது என்பது எவ்வளவு சவாலானது என்பதை உணர முடியும்.
என்னோடு சட்டக் கல்லூரியில் படித்த ஒரு பெண் ஓராண்டு காலம் எந்த மூத்த வழக்கறிஞருடைய அலுவலகத்திற்கும் செல்லாமல் தினமும் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்து, வழக்கறிஞர்களுடைய வாதத்தையும், அவர்கள் குறுக்கு விசாரணை செய்யும் முறையையும் கவனித்து வந்தாள். “ஏதாவது ஒரு அலுவலகத்தில் சேர்ந்துவிடலாமே” என்று நான் கேட்டபோது “எனக்கு யார், எப்படி, என்று எதுவும் தெரியாது. எனக்குத் திருப்தி இருந்தால் மட்டுமே நான் ஒரு அலுவலகத்தை தேர்ந்தெடுக்க முடியும்” என்று தெளிவான மன நிலையில் கூறினாள். அவளுடைய குடும்பம் சாதாரண எளிமையான குடும்பமாக இருந்த போதிலும், பெற்றோர்கள் அந்தப் பெண் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.
அந்தப் பெண்ணும் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவளாகவே இருந்து வந்திருக்கிறாள். இளங்கலை அறிவியலில் தங்கப் பதக்கம் பெற்றவள் வேறு ஏதாவது துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம், அவளுக்கு நல்ல ஊதியத்துடன் ஒரு பணி கிடைத்திருக்கும். ஆனால் அவள் இந்திய நீதித்துறையில் ஒரு உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாள். அது அவளின் லட்சியமாகவே இருந்தது.
ஓராண்டுகாலம் நீதிமன்றப் பணிகளை கவனித்து வந்த பிறகு, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிவது தனக்கு உகந்தது அல்ல என்று முடிவு செய்து சென்னை நோக்கிப் பயணப்பட்டு விட்டாள். தனக்குக் கிடைத்த கீழமை நீதிமன்ற நீதிபதி பதவியையும் அவள் மறுத்திருக்கிறாள். மாவட்ட நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி என்ற கனவோடு அவளது பயணம் இன்றும் தொடர்கிறது. அவளைப் போல துணிச்சல் எல்லோருக்கும் வராது, இயலாது. ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே தங்களது கனவுகளையும் திட்டங்களையும் அமைக்க வேண்டியிருக்கிறது.
எந்தவொரு முடிவையும் தானாகவே எடுக்கும் வாய்ப்பு இந்தியப் பெண்களுக்கு மறுக்கப்பட்டே வருகிறது. இதில் பெண் வழக்கறிஞர்களும் விதிவிலக்கல்ல. திருமணம், ஊதியம், வரையரையில்லா வேலைநேரம் என பலமுனை நெருக்கடிகளைச் சந்திக்கும் பெண்கள் நீதிமன்றத்திற்கு வந்த ஓராண்டிலேயே ஊதியத்திற்கு உத்தரவாதம் உள்ள ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர்.
எனக்குத் தெரிந்து பலர் இந்தத் துறையை விட்டே சென்று விட்டனர். சிலர் அரசு வழக்கறிஞர் பணியிடத்திற்கோ அல்லது கீழமை நீதிமன்ற நீதிபதி பணியிடத்திற்கோ நடக்கும் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்தும் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.
இதரத் துறைகளைக் காட்டிலும் நீதித்துறைக்கான போட்டித் தேர்வுகளில், போட்டி சற்றுக் குறைவு என்பது இந்தத் துறையில் உள்ள பெணக்ளுக்கு சற்று ஆறுதலான விசயமாகும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு இருப்பதால் சற்று முயற்சி செய்தாலே போதும், ஒரு குறிப்பிட்ட இடத்தை பெற்றுவிட முடியும். அவ்வாறு நீதித்துறையில் சிறந்த இடத்திற்கு பல பெண்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த நிலையை எட்ட எவ்வளவு சிக்கல்களையும் இன்னல்களையும் சந்தித்திருப்பார்கள் என்பது வழக்கறிஞராக பணியாற்றுபவர்களுக்குத்தான் தெரியும்.
பெண்களுக்கென்றே உள்ள சில குடும்பக் கடமைகளையும் அவர்கள் நிறைவேற்றியாக வேண்டும். இப்படிப்பட்ட இன்னல்களையும் துயரங்களையும் தாண்டித்தான் பல பெண்கள் சிறந்த வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்கள். வழக்குகளைத் தயார் செய்வது, அன்றாட அலுவலகப் பணிகளை முறைப்படுத்துவது, நீதிமன்றங்களுக்குச் சென்று வருவது என தொடர்ந்து இயங்கும் அவர்களுடைய மனஉறுதியையும் தன்னம்பிக்கையையும் நாம் பாராட்ட வேண்டும். பெயர் குறிப்பிடும்படியான இடத்திற்கு வருவதற்குள், அவர்கள் இழந்த வாழ்வை யாராலும் திருப்பித் தரமுடியாது.
இதெல்லாம் தெரிந்து தான் பெண்கள் சட்டம் படிக்கிறார்களா?. அல்லது அரசு வழக்கறிஞராகவோ நீதிபதியாகவோ தேர்வாகிவிட முடியும் என்ற நம்பிக்கையில் வருகிறார்களா? அல்லது திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் பார்த்து சமூக அந்தஸ்திற்காக வருகிறார்களா?. என்ற கேள்வி எழாமல் இல்லை.
பணத்திற்காகவோ, அந்தஸ்திற்காகவோ மட்டும் வழக்கறிஞராக வந்திருப்பார்கள் என்று கருதிவிட முடியாது. ஏனெனில் அந்த இரண்டும் இந்தத் துறையில் அவ்வளவு எளிதில் பெற்றுவிடக் கூடிய ஒன்றல்ல. அது அவர்களுக்கும் தெரிந்திருக்கும். ஏதேனும் ஒரு சமூகக்காரணி தான் அவர்களை ஒரு வழக்கறிஞராக மாற்றியிருக்கும். அதில் வெற்றி பெறுகிறார்களா? என்பதில்தான் அவர்களது வாழ்வின் அர்த்தம் அடங்கியிருக்கிறது.
இதரத் துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை நாம் எளிதில் பட்டியலிட்டு விடமுடியும். ஆனால் வழக்கறிஞர் தொழிலும், நீதித்துறையிலும் அவ்வாறு உடனடியாக பட்டியலிட முடியாத அளவில்தான் இந்தியப் பெண்களின் நிலை இருக்கிறது.
தொடரும்….