காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அல்லது புகாருக்கான ரசீது கொடுப்பது என்கிற இரண்டு நடைமுறைகளைதாம் வைத்திருக்கிறார்கள் என்பது காவல் நிலையத்திற்குச் சென்றவர்கள் உட்பட, செல்லாத பலரும் கூட கேள்விப் பட்டிருப்பீர்கள் அல்லவா?
இதில் ரசீது கொடுத்து விசாரணை செய்வது என்பது முழுக்க முழுக்க குற்ற விசாரணை முறை விதிகளில் சொல்லப்படாத, அதாவது அச்சட்ட விதியை அமல்படுத்திய குடியரசுத் தலைவரால் அறிவுறுத்தப்படாத ஒரு கட்டப்பஞ்சாயத்து செயல்.
குற்ற விசாரணை முறை விதி 154 இன்படி, நீங்கள் கொடுக்கும் புகார் கைது செய்வதற்கு உரிய குற்றமாக இருக்கும் போது, உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றவாளி தப்பிக்காதவாறு கைது, புலனாய்வு உட்பட அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதுவே கைது செய்வதற்கு உரிய குற்றமாக இல்லாத போது, அதற்கு என மாநில அரசு உருவாக்கியுள்ள படிவத்தில் பதிவு செய்து கொண்டு (இப்படிவம் என்பது ஒருபோதும் முதல் தகவல் அறிக்கை கிடையாது) உங்களை அக்காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குச் சொல்ல வழிகாட்ட வேண்டும் என்றும், அப்புகாரின் மீது விசாரணை செய்யும் அல்லது விசாரணைக்கு அனுப்பும் நீதித்துறை நடுவரின் உத்தரவு இல்லாமல், காவல்துறை விசாரணை செய்யவே கூடாது என்று குற்ற விசாரணை முறை விதி 155 அறிவுறுத்துகிறது.
ஆனால் காவல்துறையிலோ, பெரும்பாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய புகார்களுக்கு ரசீது வழங்கி கட்டப்பஞ்சாயத்து செய்வதும், விசாரணை செய்ய அதிகாரம் இல்லாத புகாரை, தாங்களே உ(ய)ரிய சட்டப்பிரிவுகளுடன் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொள்வதையுமே அவர்களின் பற்பல வசதிக்காக வாடிக்கையாக வைத்திருக்க, மாக்களுக்கும் இந்த விபரங்கள் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நன்றி - அடிப்படை உரிமையியல் சட்டம்
No comments:
Post a Comment