Monday, 9 April 2018

பயன்படுத்தாத மின்சாரத்துக்கு கட்டணம்:

பயன்படுத்தாத மின்சாரத்துக்கு கட்டணம்: அலுவலர்களுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்: நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு:
--------------------------------------------------------------------------------
பயன்படுத்தாத மின்சாரத்துக்கு கட்டணம் வசூல் செய்த மின்வாரிய அலுவலர்களுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சேர்ந்தவர் சுதந்திரா. இவர், இதே பகுதியில் திருமண மண்டபம் கட்டி உள்ளார். இதற்கு முன்பாக தாற்காலிக மின் இணைப்பு பெற்று 90 நாள்களுக்கு ஒருமுறை புதுப்பித்து வந்தார். கடந்த 2013 டிசம்பரில் திருமண மண்டபத்தின் கட்டடப் பணிகள் முடிந்து திறக்கப்பட்டது. எனவே, தாற்காலிக மின் இணைப்புக்குப் பதிலாக நிரந்தர மின்இணைப்பு வழங்கக் கோரி ராதாபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த இணைப்பில் 4 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளதாகவும்,ரூ.30,395 நிலுவைத் தொகை செலுத்தினால் மட்டுமே நிரந்தர இணைப்பு வழங்க  முடியும் எனவும் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2013 நவம்பர் மாதம் மின்வாரியத்தில் ஆய்வு செய்ததில் 40 டியூப் லைட்,  1 கட்டிங் மிஷின், ஹெச்பி மோட்டார் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் 4 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தியிருப்பதால் ரூ.30,395 செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து பணத்தைச் செலுத்தி நிரந்தர இணைப்பு பெற்றுவிட்டார். இந்நிலையில் ஆவணங்களைச் சரிபார்த்ததில் ஆய்வு செய்ததாகக் கூறப்படும் மாதத்தில்தான், மின்வாரியத்திடம் இருந்து தாற்காலிக இணைப்பை புதுப்பிக்க அளிக்கப்பட்ட அனுமதி கடித விவரமும் இருந்தது. அந்த கடிதத்தில் 840 வாட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்,அதே மாதத்தில் ஆய்வு செய்து 4 கிலோவாட் எனவும் மின்வாரியத்தினர் கூறியுள்ளனர். இந்த முரண்பாடு தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சுதந்திரா மனுதாரர் தரப்பில், வழக்குரைஞர் பிரம்மா வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி கிள்ளிவளவன், உறுப்பினர் ராணி ஆகியோர் அளித்த உத்தரவு: மனுதாரர் மின்சாரம் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. எனவே, பயன்படுத்தாத மின்சாரத்துக்கு வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப வழங்க வேண்டும். மேலும், மனுதாரரின் மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவுக்கு ரூ.4 ஆயிரம் என மொத்தம் ரூ.14 ஆயிரம் வழங்க வேண்டும். ஒரு மாதத்தில் இந்தத் தொகையை உதவி பொறியாளர் ராதாபுரம், நிர்வாக பொறியாளர் வள்ளியூர் ஆகியோர் வழங்க வேண்டும். இல்லையெனில் 9 சத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது .
Source: dinamani - 29th April 2017
------------------------------------------------------------------------------
மின்சாரம் சார்பான எனது முந்தைய பதிவு:

Electricity supply is a legal right, Madras high court says
https://www.facebook.com/groups/685954204947280/permalink/692270900982277/

No comments:

Post a Comment