Monday, 9 April 2018

காசோலைபடி ஒருவர் பணம் தரவில்லை என்பதற்காக அவர்மீது மோசடி வழக்கு தொடர முடியுமா?

சந்திரன் என்பவர் ரூ. 20,000 த்தை பொன்னப்ப மூத்தன் என்பவரிடம் கடனாக பெற்றிருந்தார். அந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக சந்திரன் ஒரு காசோலையை பொன்னப்ப மூத்தன் பெயருக்கு வழங்கியிருந்தார். அந்த காசோலையை பொன்னப்ப மூத்தன் பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தினார். ஆனால் அந்த காசோலையானது வெகு காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டு விட்டதாக வங்கி குறிப்பாணை வழங்கியது. உடனே பொன்னப்ப மூத்தன் காசோலையில் கண்ட தொகையை தர வேண்டும் என்று கேட்டு சந்திரனுக்கு ஒரு வழக்கறிஞர் அறிவிப்பை அனுப்பினார். ஆனால் அதன்பிறகும் சந்திரன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட பொன்னப்ப மூத்தன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சந்திரன் மீது இ. த. ச பிரிவு 420 ன் கீழ் ஒரு வழக்கினை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் சந்திரனுக்கு இ. த. ச பிரிவு 417 ன் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து சந்திரன் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார். அந்த மேல்முறையீட்டை மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து சந்திரன் கேரளா உயர்நீதிமன்றத்தில் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

சந்திரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை சட்டப்படி ஏற்புடைய ஒன்றா? என்பதை உயர்நீதிமன்றம் பிரதானமாக விசாரித்தது.

காசோலை கொடுக்கப்பட்ட பொழுது வங்கி கணக்கு முடிக்கப்பட்டு விட்டது என்பதை சந்திரன் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மறைத்து விட்டார் என்பதே சந்திரன் மீதான குற்றச்சாட்டு ஆகும். இந்த விஷயத்தை உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கூட சந்திரனுக்கு இ. த. ச பிரிவு 417 ன் கீழ் தண்டனை வழங்க முடியாது. ஏனென்றால் இ. த. ச பிரிவு 415 ல் 'ஏமாற்றுதல்' என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி பிரிவின் படி ஒருவர் கெட்ட உள்நோக்கத்தோடு ஒருவரை, ஒரு சொத்தை அல்லது பணத்தை ஒரு நபருக்கு கொடுக்கும்படியோ அல்லது ஒரு சொத்தை வைத்திருக்க ஒப்புதல் அளிக்கும்படியோ அல்லது உள்நோக்கத்தோடு ஒருவரை, ஒரு செயலை செய்ய தூண்டுவதோ அல்லது செய்யக்கூடாத ஒரு செயலை செய்யும் தூண்டுவதன் மூலம் அவருடைய உடல், மனம், புகழ் அல்லது சொத்துக்கு சேதம் அல்லது தீங்கு உண்டாக்குகிறதோ அல்லது அநேகமாக உண்டாக்க கூடியதாகவோ அந்த செயல் அல்லது செய்யாமல் விடுதல் ஆகியவற்றை விருப்பமில்லாத நிலையில் அல்லது விரும்பியிருக்கக் கூடிய நிலையில் அது செய்யும்படி அல்லது செய்யாமல் இருக்கும்படி உட்கருத்தோடு தூண்டுகிற எவரொருவரும் ஏமாற்றுதல் என்ற குற்றத்தை செய்தவர் ஆவார்.

ஆனால் இந்த வழக்கில் காசோலை நடப்பிலுள்ள ஒரு கடனை தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு காசோலை கொடுக்கும் பொழுது வங்கி கணக்கு முடிக்கப்பட்டு விட்டது என்ற விவரத்தை சந்திரன் மறைத்தது இ. த. ச பிரிவு 415 ல் கூறப்பட்டுள்ள விளக்கத்திற்குள் வராது. வங்கி கணக்கு முடிக்கப்பட்டு விட்டதால் பொன்னப்ப மூத்தன் எந்த வகையிலும் வஞ்சிக்கப்படவில்லை. சந்திரன் அந்த உண்மையை மறைத்ததால் பொன்னப்ப மூத்தனின் உடலுக்கோ, மனதிற்கோ, புகழுக்கோ அல்லது சொத்துக்கோ எந்த இழப்பும் அல்லது தீங்கும் ஏற்படவில்லை. பொன்னப்ப மூத்தன் தனக்கு வரவேண்டிய கடனை காசோலை மூலமாக வசூல் செய்ய முடியவில்லை என்பதை தவிர வேறு எந்த ஒரு சம்பவமும் சந்திரனால் நடைபெறவில்லை. மேலும் ஏமாற்றுதல் அடிப்படையில் தொகை அல்லது சொத்து எதுவும் கைமாறவில்லை.

எனவே சந்திரனுக்கு குற்றவியல் நடுவர் விதித்த தண்டனை சட்டத்தின் படி தவறான ஒன்றாகும் என்று கூறி அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து நீதியரசர் திரு. P. S. கோபிநாதன் தீர்ப்பு வழங்கினார்.

CRP. NO - 650/2004

K. சந்திரன் Vs பொன்னப்ப மூத்தன் மற்றும் பலர்

2013-2-CRIMES-KL-134

1 comment:

  1. ஐயா... எனக்கு ஒரு நபர் பணம் தர வேண்டும்... அதை கேட்டல் தரமுடியாது என்று அவர் கூறுகிறார்... அதற்கு நான் கூறியது சரி எப்ப தருவனு கேட்டால் அதுக்கு சரியான முறையில் பதில் அளிக்க மறுக்கிறார்... மீண்டும் கேட்டால் மது போதையால்... வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தைகளால் பேசுகிறார்... மனம் நொந்து போய் இதுக்கு மேலஉயிர் வால வேண்டாம் என்று முடிவுக்கு போய்ட்டேன்...என் மனைவி என் குழந்தகள் 2மகன் இறுக்கரங்க எனக்கு. இப்ப என்ன பண்றது ...

    ReplyDelete