உச்சநீதிமன்றம் "Citizen Democracy Vs State of Association (AIR-1996-SC-2193)" என்ற வழக்கில், ஒரு கைதியை அவர் தண்டனை அடைந்திருந்தாலும், விசாரணைக் கைதியாக இருந்தாலும், இந்த நாட்டில் எங்கிருந்தாலும் ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைச்சாலைக்கு மாற்றும் பொழுதோ அல்லது சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பொழுதோ, நீதிமன்றத்திலிருந்து திரும்ப சிறைச்சாலைக்கு அழைத்து வரும் பொழுதோ அல்லது சிறையில் இருக்கும் பொழுதோ அந்த கைதிக்கு கைவிலங்கு இடக்கூடாது.
காவல்துறையினரோ, சிறை அதிகாரிகளோ ஒரு கைதி சிறையிலிருந்து தப்பி ஓடிவிடுவார் அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொழுது தப்பி ஓடிவிடுவார் என வலுவாக எண்ணினால் அந்த கைதியை குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி கைதிக்கு கைவிலங்கு போட அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை பெற்றுக் கொண்ட குற்றவியல் நடுவர் கைதி வன்முறையில் ஈடுபடக்கூடியவர், தப்பி ஓடிவிடுவார் அல்லது மிகவும் அபாயகரமான நபர் என தீர்மானிக்கும் பட்சத்தில் கைதி தப்பி ஓடுவதை தவிர்க்கும் பொருட்டு குற்றவியல் நடுவர் கைதிக்கு கைவிலங்கு போட அனுமதிக்கலாம்.
எந்த வகையான வழக்காக இருந்தாலும் கைது செய்யப்படும் நபரை நீதிமன்றம் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தும் பொழுது அவருக்கு கைவிலங்கு இடக்கூடாது. நீதிமன்ற காவலில் வைக்க அனுமதி அளிக்கும் பொழுது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபருக்கு கைவிலங்கு போட சிறப்பு அனுமதியை பெற வேண்டும்.
ஒரு நபரை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின் (Warrant) அடிப்படையில் கைது செய்தால் அவருக்கு காவல்துறையினர் கைவிலங்கை குற்றவியல் நடுவரின் அனுமதி இல்லாமல் போடக்கூடாது.
நீதிமன்றத்தின் பிடியாணை இல்லாமல் கைது செய்யக்கூடிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபருக்கு மேலே சொன்ன வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு கைது செய்த நபரை காவல் நிலையம் கொண்டு செல்லும் வரையில் பின்னர் காவல் நிலையத்திலிருந்து குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தும் வரையும் கைவிலங்கு போட குற்றவியல் நடுவரின் அனுமதியை பெற வேண்டும்.
இந்த உத்தரவை காவல்துறை மற்றும் சிறைத்துறையை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் தனி கவனம் செலுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த உத்தரவுக்கு கீழ்படியாமல் செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு நீதிமன்ற அவமதிப்பிற்கான தண்டனையையும் பெற நேரிடும் என தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே ஒரு கைதியை கைவிலங்கு போட்டு அழைத்து வருவது மேற்படி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது, மேலும் மனித உரிமையை மீறிய குற்றமாகும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
H. C. P. NO - 106/2012
பூவாயி Vs மாநில அரசுக்காக அதன் செயலாளர்
2012-3-MLJ-CRL-38
No comments:
Post a Comment