ஜீவனாம்சம் கேட்டு கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் மனுதாக்கல் செய்து அதில் ஒரு உத்தரவையும் பெற்றுள்ள மனைவி திரும்பவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்து கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியுமா?
வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் திரு. T. லஜபதிராய் அவர்கள் தன்னுடைய வாதத்தில், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20(1)(d) ன் கீழ் ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவினை பிறப்பிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டார். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய பிரிவுகள் என்றும்,பாதிக்கப்பட்டவர் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் அல்லது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் என இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறினார்.
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20(1)(d) ல் கூறப்பட்டுள்ளதை பார்க்கும் பொழுது பிரிவு 20 ன் கீழ் வழங்கப்படும் பொருளாதார நிவாரணத்தில் ஜீவனாம்சம் அளிக்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் அடங்கும். எனவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ன் கீழ் ஜீவனாம்சம் வழங்கி ஓர் உத்தரவினை குற்றவியல் நடுவர் பிறப்பித்திருந்தாலும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் பொருளாதார நிவாரணத்தை வழங்கி மற்றொரு உத்தரவை குற்றவியல் நடுவர் பிறப்பிப்பதற்கு எந்த தடையும் இல்லை. அவ்வாறு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவானது ஏற்கனவே கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து மாறுபட்ட ஒரு உத்தரவாக இருக்கக்கூடாது.
தனக்கு கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஜீவனாம்ச தொகையை உயர்த்த வேண்டும் என்று மனைவி விரும்பினால் அவர் எந்த குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றாரோ அந்த நீதிமன்றத்தில் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி தரக்கோரி கு. வி. மு. ச பிரிவு 127 ன் கீழ் மனுதாக்கல் செய்ய வேண்டும். ஜீவனாம்சம் கோரி கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஒரு குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் செயல்படும் மற்றொரு குற்றவியல் நடுவரால் எந்த மாறுதலும் செய்ய இயலாது. எனவே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் வழங்கப்படும் பொருளாதார நிவாரணம் என்பது கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஏற்கனவே ஜீவனாம்சம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாறுதல் செய்யப்பட்ட ஓர் உத்தரவாக கருத முடியாது.
ஒரு மனைவி கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஒரு உத்தரவை பெற்றிருப்பாரேயானால், அவரை அவருடைய கணவர் நிராகரித்து விட்டார் அல்லது பராமரிக்க தவறி விட்டார் அல்லது மறுத்து விட்டார் என்ற சங்கதிகளை அவர் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார் என்று கருத வேண்டும். ஏற்கனவே கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் பெறப்பட்டுள்ள உத்தரவோடு கூடுதலாக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் ஓர் உத்தரவினை பெற மனைவி விரும்பினால், கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஏற பெறப்பட்ட உத்தரவிற்கு பிறகு, அவருடைய கணவர் குடும்ப வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்ற புதிய குற்றச்சாட்டுகளை மனைவி நிரூபிக்க வேண்டும். கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் மீண்டும் மனுத்தாக்கல் செய்ய முடியாது. ஏற்கனவே கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் பெறப்பட்டுள்ள உத்தரவோடு, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் ஒரு உத்தரவை மனைவி பெற விரும்பினால், கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு பிறகு, அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், குடும்ப வன்முறைகள் குறித்து நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் தான் கூடுதல் ஜீவனாம்சம் தொகையை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மனைவி பெற முடியும். எனவே கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஏற்கனவே ஓர் உத்தரவினை மனைவி பெற்றிருந்தாலும் கூட, குடும்ப வன்முறையால் பின்னர் அந்த மனைவி பாதிக்கப்பட்டிருந்தால் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் பொருளாதார நிவாரணங்களை பெறுவதற்கு இயலும்.
இது சம்பந்தமாக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 36 ல் கூறப்பட்டுள்ளவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சட்டத்திலுள்ள பிரிவுகள் தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டப் பிரிவுகளுக்கு கூடுதலான, இணையான சட்டப் பிரிவுகளாகும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ஆனது கு. வி. மு. ச பிரிவு 125 க்கு கீழான ஒரு பிரிவு அல்ல. கணவர் தனது மனைவியை நிராகரித்தால் அல்லது பராமரிக்க மறுத்தால் மனைவி கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் அவருடைய நிவாரணத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இவ்வாறு ஒரு மனுவை தாக்கல் செய்ததற்கு பிறகு, அதே வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் ஒரு மனுவை தாக்கல் செய்ய முடியாது. அதேபோல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் மனுதாக்கல் செய்துவிட்டால் அதே வாக்குமூலத்தின் அடிப்படையில் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் மற்றொரு வழக்கை தாக்கல் செய்ய முடியாது. மனைவியால் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அதே குற்றச்சாட்டுகளுடன் அதே வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் மற்றொரு மனுவை தாக்கல் செய்ய முடியாது. இதே நிலை தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் ஏற்கனவே ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டாலும் ஏற்படும்.
கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஏற்கனவே ஒரு மனுவை தாக்கல் செய்து ஓர் உத்தரவினை பெற்றிருந்தால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு பின்னர் நடைபெற்ற குடும்ப வன்முறை சம்பவத்திற்காக மற்றொரு மனுவை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யலாம் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 453/2014, DT - 28.7.215
Prakash Vs Deepa and One another
2015-4-MLJ-CRL-352
No comments:
Post a Comment