Wednesday, 25 April 2018

உயிலை எழுதி வைப்பவர் உயிலில் கையொப்பம் இடுவதை சாட்சிகளும், உயிலில் சாட்சிகள் கையொப்பம் இடுவதை உயிலை எழுதி வைப்பவரும் நேரில் பார்த்திருக்க வேண்டுமா?

ஒரு உயிலின் மூலம் பயனடையக்கூடிய நபர்கள் அந்த உயில் எழுதப்பட்டுள்ளது மற்றும் சான்றுக் கையொப்பங்கள் இடப்பட்டுள்ளது போன்ற சங்கதிகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். உயில் எழுதப்படுவதும் (Execution) அந்த உயிலில் சான்றுக் கையொப்பம் இடப்படுவதும் (Attestation) வெவ்வேறான இரண்டு செயல்களாகும். ஒரு செயலை தொடர்ந்து மற்றொரு செயல் நடைபெறுகிறது. இந்திய வாரிசுரிமை சட்டம் பிரிவு 63(c) ல் கூறப்பட்டுள்ளவாறு ஒரு செயலும், சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 3 ல் கூறப்பட்டுள்ளவாறு மற்றொரு செயலும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றுள்ளது என்பதை சட்டம் எதிர்பார்க்கிற வகையில் நிரூபிக்கப்பட வேண்டும். ஓர் உயிலில், உயிலை எழுதியவர் கையொப்பம் இட்டிருந்தாலும், அந்த உயிலில் சாட்சிகள் சான்று கையொப்பம் இட்டுள்ளதை நிரூபிக்காத நிலையில் அந்த உயிலை தகுதியான உயிலாக கருத முடியாது.

இந்திய வாரிசுரிமை சட்டம் பிரிவு 63(c) ல், உயிலில் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்ட சாட்சிகள் கையொப்பமிட வேண்டும் என்றும் அவர்களில் ஒவ்வொருவரும் உயிலை எழுதி வைப்பவர் உயிலில் கையொப்பம் இடுவதை அல்லது கைரேகை இடுவதை பார்த்தல் வேண்டும் அல்லது உயில் எழுதி வைத்தவருக்காக உயில் எழுதி வைத்தவரின் கட்டளையின் பேரில் அவரது முன்னிலையில் கையொப்பமிடும் நபரை, இந்த சான்று கையொப்பமிடும் சாட்சிகள் பார்த்திருக்க வேண்டும் அல்லது உயில் எழுதி வைத்தவரிடமிருந்து அவரது கையொப்பம் அல்லது கைரேகை அல்லது அவருக்காக கையொப்பமிடுபவரின் கையொப்பம் ஆகியவற்றிற்கான தனிப்பட்ட ஒப்புகையை பெற வேண்டும் என்றும் உயிலில் சாட்சிக் கையொப்பமிடும் ஒவ்வொரு சாட்சியும் உயில் எழுதி வைப்பவரின் முன்னிலையில் கையொப்பம் இட வேண்டும் என்றும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகள் முன்னிலையாகியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்றும், சான்றொப்பம் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டப் பிரிவை தெளிவாக படித்துப் பார்த்தால், ஓர் உயிலை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கு, அந்த உயில் எழுதப்பட்டது மற்றும் அந்த உயிலில் சான்று கையொப்பமிட்டுள்ளது ஆகிய இரண்டு செயல்களும் நிரூபிக்கப்பட வேண்டும் என்பது நன்றாக தெரிய வரும்.

மாண்புமிகு உச்சநீதிமன்றம் " H. வெங்கடாசல ஐயங்கார் Vs  B. N. திம்மஜம்மா மற்றும் பலர் (AIR-1959-SC-443)" என்ற வழக்கின் தீர்ப்பு பத்தி 19 ல், ஓர் உயிலுக்கும் மற்ற ஆவணங்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. மற்ற ஆவணங்களை போல் அல்லாமல், உயில் ஆவணம் அதனை எழுதி வைத்தவர் இறந்ததற்கு பிறகு தான் ஊர்ஜிதத்திற்கு வரும். எனவே ஒரு உயில் ஆவணம் நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்படும் பொழுது அந்த உயிலை எழுதி வைத்தவர் இவ்வுலகத்தை விட்டு சென்று விடுவதால், அந்த உயில் இறந்து போனவரால் எழுதப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து அந்த இறந்து போன நபர் சாட்சியம் அளிக்க முடியாது. ஆகையால் ஓர் ஆவணத்தை மெய்பிப்பதற்காக ஒரு நீதிமன்றம் எத்தகைய விசாரணையை மேற்கொள்ளுமோ, அதுபோன்றதொரு விசாரணையை உயிலை மெய்பிப்பதற்கான விசாரணையை நீதிமன்றம் மேற்கொள்ள ஆரம்பிக்கிறது. அந்த வகையில், உயிலை எழுதி வைத்தவர் அந்த உயிலை எழுதி வைக்கக்கூடிய திட சிந்தனையிலும், மனப்பூர்வமாகவும் அவருடைய செயலின் தன்மையை உணர்ந்து கொண்டவராகவும் இருந்துள்ளார் என்பதை நீதிமன்றம் மனநிறைவு அடையும் வகையில், அந்த உயிலின் மூலம் பயன்பெறக்கூடிய நபர் நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்துகிறது. அந்த உயிலை எழுதி வைத்தவர், அந்த உயில் எழுதப்பட்ட போது, திடமான மனநிலையுடன் இருந்தார் என்பதையும் அந்த உயிலின் தன்மையை புரிந்து கொண்டு, அவர் அதில் கையொப்பம் செய்துள்ளார் என்பதையும் உயிலின் மூலம் பயன்பெறக்கூடிய நபர் நிரூபிக்கும் நிலையில், அவருக்கு சாதகமான ஓர் உத்தரவினை நீதிமன்றம் பிறப்பிக்கும். உயிலின் மூலம் பயன்பெறக்கூடிய நபருக்கு தான் அந்த உயிலை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது என்று கூறியுள்ளது.

இதே கருத்தை உச்சநீதிமன்றம் " காசிபாய் Vs பார்வதி பாய் (1995-2-CTC-476 & 1995-6-SCC-213)" என்ற வழக்கிலும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment