Monday, 9 April 2018

கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தொழிலாளிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


--------------------------------------------------------------------------------------
பெரம்பலூர் : அரியலூர் அருகே தொழிலாளிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க கூட்டுறவு கடன் சங்க செயலாளருக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது. அரியலூர் அருகே உள்ள இலுப்பையூரை சேர்ந்தவர் பாலமுருகன்(38). சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை அண்ணாமலை அதே ஊரில் உள்ள வேளாண்மை கடன் சங்கத்தில் செயலாளராக பணி புரிந்தார். ஓய்வுபெற்ற பிறகு அண்ணாமலை தனது பெயரில் ரூ.80 ஆயிரம் நகைக் கடனாக பெற்றிருந்தார். தனது மனைவிகளான சரோஜா,  மீனாட்சி ஆகிய இருவரது பெயரில் ரூ.90 ஆயிரத்து 330 பயிர்க்கடன் மற்றும் கறவை மாட்டு கடனாக பெற்றிருந்தார்.

அண்ணாமலை இறந்த பிறகு அவர் பெற்ற கடன் தொகையை சட்டப்பூர்வ வாரிசு என்ற அடிப்படையில் பாலமுருகன் வங்கியில் செலுத்தி, நகைகளை திருப்பி தருமாறு கடன் சங்க செயலாளரிடம் கேட்டார். ஆனால் அப்போது செயலாளராக வேலை பார்த்த நல்லப்பன், அண்ணாமலை பெற்ற இதர கடன் தொகையை செலுத்தினால்தான் நகைகளை தர இயலும் என்றுக் கூறி நகைகளை தரமறுத்தார்.

பாதிக்கப்பட்ட பாலமுருகன் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளரிடம் புகார் செய்தார். இதனை விசாரித்த இணைப்பதிவாளர் பாலமுருகனிடம் நகைகளை திருப்பி அளிக்குமாறு உத்திரவிட்டார். அதனை தொடர்ந்து 43 நாட்களுக்கு பிறகு கூடுதல் வட்டி பெற்றுக்கொண்டு இலுப்பையூர் கூட்டுறவு கடன் சங்கத்தினர் நகைகளை திருப்பி கொடுத்தனர்.இலுப்பையூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் சேவைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு மனஉளைச்சல் அடைந்த பாலமுருகன் கடன் சங்க செயலாளர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜூலை 2011ல் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை நுகர்வோர் நீதிமன்றத்தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். வழக்கு முடிவில் மனுதாரர் பாலமுருகனுக்கு இலுப்பையூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ரூ.10ஆயிரம் நஷ்டஈடும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.3 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.13ஆயிரத்தை ரூ.2மாதத்திற்குள் அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டனர்.

No comments:

Post a Comment